தஸ்யுக்கள்
என்போர் வேற்று இனத்தவர் அல்ல என்பதை அறிந்து கொண்டோம். பின்
அவர்கள் யார்?
இந்திரன்
முதலானோர் ஆர்யர்களுக்காக தஸ்யுக்களை அழித்தனர் என வேதம் கூறுகிறது.
தஸ்யுக்கள்
ஆர்யர்களுக்கு இழைத்த தீங்கு என்ன? எதற்காக அவர்கள்
அழிக்கப்பட்டனர்?
தஸ்யுக்கள்
பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று பார்த்தோம். அவர்களில்
விருத்திரன் என்பவன் மலைப் பாம்பு வடிவத்தில் நீர் வரும் வழியில் படுத்துக் கொண்டு
நீரைத் தடுத்தான். வலன் என்பவன் ஆர்யர்களுக்குச் சொந்தமான
பசுக்களைச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். பெயர்
குறிப்பிடப்படாத சில தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குச் சொந்தமான ஒளியைத் திருடிக் கொண்டனர்.
இந்திரன்
விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்தார். வலனைக்
கொன்று பசக்களை மீட்டார். மற்ற தஸ்யுக்களைக்
கொன்று ஒளியை மீட்டார்.
ஒளியை யார்
திருட முடியும் என்று சிந்திக்கும்பொழுது இது ஒரு உருவகமாகத் தான் இருக்க வேண்டும்
என்பது தெரிகிறது.
சாயணர்
அளிக்கும் உருவகப் பொருள்- மேகம்
விருத்திரன்
என்பது மேகங்கள். இந்திரன் தன் நண்பர்களாகிய மருத் என்னும்
காற்றின் துணை கொண்டு அதை அழித்து மழை பொழிய வைக்கிறார் என்கிறார் சாயணர்.
கறுத்த
மேகத்தினூடே மின்னல் மின்னுகிறது. இடி இடிக்கிறது.
மழை
பொழிகிறது.
வானம்
வெளி வாங்குகிறது. மறைந்து இருந்த சூரியன் வெளிப்படுகிறது.
இந்திரனை
மின்னல் இடியை ஆயுதமாகக் கொண்டவர் என்பதிலிருந்து இது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
பசுக்கள் என்பதற்கு
ஒளிக் கிரணங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் சாயணர்.
இதுவும்
பொருத்தமே.
ஏனெனில்
வேதத்தில் பல இடங்களில் சூரிய கிரணங்களும் வைகறை ஒளியும் பசுக்களாக உருவகிக்கப்பட்டுள்ளன.
ஆனால் சாயணரின்
இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில் ஒரு இடைஞ்சல் உள்ளது. பசுக்களை
(சூரிய
கிரணங்களை)
மேகம்
மறைத்ததை தஸ்யு திருடினான் என்று கொண்டால் சரமா என்னும் நாயின் உதவியால் அங்கிரஸ் முனிவர்கள்
பசுக்களின் இருப்பிடத்தை அறிந்தனர் என்பதை எப்படிப் பொருள் கொள்வது?
உருவகம்
-2 நிலச்சரிவு
இதோ மற்றொரு
ஊகம்.
இது
சாயணர் கூறாதது.
மலைப் பிரதேசங்களில்
நிலச் சரிவு என்பது வழக்கமான ஒன்று. சில சமயங்களில்
இந்த நிலச் சரிவு நதிகளில் விழுந்து நதிகளின் போக்கைத் தடுத்து விடும் அல்லது மாற்றி
விடும்.
2008 மே
12இல்
சீனாவில் வென்சுவான் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச் சரிவு, ஒரு
நதியைத் தடுத்து அதை ஏரியாக மாற்றி விட்டது. நதியின்
கீழ்புறம் வறண்டுவிட்டது. ஏரியில் மேலும்
மேலும் தண்ணீர் வந்து சேரவே அது வேறு திசைகளில் உடைப்பு எடுத்துப் பெருகக் கூடிய அபாயம்
ஏற்பட்டது.
அப்பொழுது
சீன அரசு அங்கு உடனடியாக ஆட்களை அனுப்பி, அந்த ஏரிக்கரையை குண்டு போட்டு உடைத்து
நதியை முன்பு போல ஓடச் செய்தது.
இந்திரன் செய்ததும்
இது போலத் தான் இருக்க வேண்டும். விருத்திரன்
என்பது நிலச் சரிவால் நதியின் போக்கில் மலைப் பாம்பு வடிவத்தில் ஏற்பட்ட ஒரு தடையாக
இருக்க வேண்டும். வலிமையுள்ள அரசனான இந்திரன்,
தன்
படையுடன் அங்கு சென்று அந்தத் தடையை அகற்றி இருக்க வேண்டும்.
வ்ருத்ரன்
என்ற சொல்லுக்கு சூழ்ந்திருப்பது என்று பொருள். அந்தத்
தடை நதியின் நீர் ஓடாதபடி சுற்றிலும் சூழ்ந்து இருந்ததால் அது அப் பெயர் பெற்றிருக்க
வேண்டும்.
அதே போல,
வலன்
என்றும் பணி என்றும் பெயரிடப்பட்ட ஒரு நிலச்சரிவால் அங்கிரஸ்களின் மாடுகள் இருந்த இடம்
மறைக்கப்பட்டிருக்க வேண்டும். மோப்ப நாயின்
உதவியால் மறைவுக்குப் பின்புறம் மாடுகள் இருப்பதை அறிந்த அங்கிரஸ்கள் இந்திரனின் துணையால்
அந்தத் தடையை வென்று மாடுகளை மீண்டும் பெற்றிருக்க வேண்டும்.
மண்
அகற்றும் திறமை படைத்த ஒரு பெரும் படை இந்திரனிடம் இருந்திருக்க வேண்டும்.
இந்த ஊகம் ஒரு
வகையில் பொருத்தமாக இருந்தாலும், இந்திரனும்
அச்வின்களும் தஸ்யுக்களைக் கொன்று ஆர்யர்களுக்கு ஜ்யோதியைக் கொடுத்தார்கள் என்று சொல்லப்படும்போது1
இந்த
உருவகம் பொருந்தவில்லை. நிலச்சரிவு
ஒளியை எப்படித் தடுக்க முடியும்?
கோத்ரம்
மூன்றாவது உருவகத்தைப்
பார்க்கும் முன் வேத காலத்தில் பசு எப்படிக் கருதப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
ரிக் வேதத்தில்
சில மந்திரங்கள் எங்களுக்கு நூற்றுக் கணக்கான, ஆயிரக்
கணக்கான பசுக்களைக் கொடு என வேண்டுகின்றன. ஓரிடத்தில்
ரிஷி தனக்கு அறுபதினாயிரம் பசுக்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறார்.2
மிகைப்படுத்தப்பட்டதாக
இருக்கலாம் என்றாலும் அவர் குறைந்தது 60 பசுக்களாவது
பெற்றிருக்கக் கூடும். இத்தனை பசுக்களை வைத்துக் கொண்டு அவர்
எப்படிப் பராமரித்தார் என்ற கேள்வி எழுகிறது.
வேதத்தில்,
பசு
மந்தைக்கும் அவை தங்கும் இடத்துக்கும் கோத்ரம் என்பது பெயர்.
பிற்காலத்தில்
இந்தப் பெயர் ஒரு பரம்பரையைக் குறிக்கும் சொல்லாக மாறியது. ஒரு
பசு மந்தையின் உடைமையாளர்கள் ஒரு கோத்ரக்காரர்கள். இவர்கள்
ஒரே கிராமத்து மக்களாக இருந்ததும், அவர்களுடைய
பொது உடமையாக இந்தப் பசுக்கள் கருதப்பட்டிருந்ததும் ஊகித்து அறிய முடிகிறது.
உருவகம்
3 - பொது
உடமைப் பொருட்களைத் திருடும் சமூக விரோதி
நீரையும்,
ஒளியையும்
போல பசுவும் எல்லோருக்கும் பொதுவான பொருளாக இருந்தது. இதன்
அடிப்படையில் மூன்றாவது உருவகத்தைப் பார்ப்போம்.
கிராமத்துக்குப்
பொதுவான பசுக்களைப் பராமரிக்க, உழைக்க வலிமையுள்ள
சிலர் நியமிக்கப் பட்டிருக்க வேண்டும். வலிமையற்றவர்கள்
அவர்களது உழைப்பின் பலனை அனுபவிப்போராக இருந்திருப்பர். ஒவ்வொருவருக்கும்
அவரவருக்குத் தேவையான பொருள் கிடைத்தது. ஒவ்வொருவரும்
அவரவருக்கு முடிந்த வேலைகளைச் செய்தனர். இது ஒரு சமதர்ம
சமுதாயம்.
பொருட்கள் தங்குதடையின்றிக்
கிடைக்கும் வரை இந்த சமுதாயத்தில் பிரச்சினை எதுவும் வர வாய்ப்பில்லை.
தட்டுப்பாடு
ஏற்படும்போது,
வலிமையுள்ள
சிலர் தனக்கென்று மிக அதிகமான பொருட்களைப் பதுக்கி வைப்பது இயல்பு.
பொதுச்
சொத்துக்களைத் தன் சொந்த நலனுக்கென்று பயன்படுத்துவோரை நாம் இன்று சமூக விரோதிகள் என்று
அழைக்கிறோம்.
வலன் என்ற பணி
பசுக்களைச் சிறைப் பிடித்தான். பணி என்ற சொல்லுக்கு
வணிகர் என்பது அடிப்படைப் பொருள். வணிகர் தான்
கொடுத்த பொருளின் மதிப்புக்குச் சமமான வேறு பொருளை பெற்றுக் கொள்வதில் குறியாக இருக்கிறார்.
பொதுச்
சொத்தைப் பராமரிப்பவர் தான் செய்வதைச் சேவையாகக் கருதாமல், தன்
உழைப்பினால் கிடைத்த உற்பத்திப் பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்தால்
அவர் பணியாக(சமூக விரோதியாக)க்
கருதப்படுவார்.
அதனால்
அவர்களை வேதம் தஸ்யு (பகைவர்) என்று
கூறுகிறது.
அக்ரது
(செயல்
அற்றவர்கள்),
அராதி
(தானம்
செய்யாதவர்கள்),
அச்ரத்தா
(சிரத்தை
இல்லாதவர்கள்),
அவ்ருதா
(நல்ல
காரியங்களை ஊக்குவிக்காதவர்கள்) என்ற அடைமொழிகளிலிருந்து
தஸ்யுக்கள் சமூக நலனுக்குப் பாதகமான குணங்களைக் கொண்டவர்கள் என்று கருத இடம் உள்ளது.
விருத்திரன்
சமுதாயத்துக்குச் சொந்தமான நீரை மக்கள் அனுபவிக்காதபடி வளைத்துப் போட்டான்.
வலன்
பொதுச் சொத்தான பசுக்களைத் தன் நலனுக்காகச் சிறைப் பிடித்து வைத்திருந்தான்.
இந்த
சமூக விரோதச் செயல்களைச் செய்யும் பகைவர்களை வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பு அந்தச்
சமுதாயத்தின் தலைவனின் பொறுப்பாகிறது. பகைவர்கள் தங்களைச்
சுற்றிப் பலத்த பாதுகாப்பு செய்து கொள்வது இயல்பே. பலர்
உதவியுடன்,
தடைகளைச்
சமாளித்து இவர்களைத் தோற்கடித்தது தான் மலையைப் பிளந்து வலனைக் கொன்று பசுக்களை மீட்டதாகவும்,
விருத்திரனைக்
கொன்று ஆறுகளைப் பெருகச் செய்ததாகவும் கூறப்படுகிறது. தஸ்யுக்களைத் தண்டிக்கும் வகையில் அவர்களை
கட்டாயப்படுத்தி அடிமைத்தனத்துக்கு உட்படுத்தும் முறை இருந்திருக்க வேண்டும் என்பது
அறியப்படுகிறது. இதனால் தஸ்யுக்கள் தாஸர்கள் ஆனார்கள்.
அவர்கள் செல்வம்
மிகப் பெற்றிருந்தும் அதைப் பிறருக்குப் பயன்படுமாறு கொடுக்காமல் இருந்தார்கள்,
இனிமையான
பேச்சு இல்லாதவர்கள் என்பதை அறிய முடிகிறது.
தஸ்யுக்களை
அழிக்குமாறு தேவர்களை வேண்டுகிறார்களே தவிர, ஆர்யர்கள்
தாங்களே ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. தேவர்களால்
தோற்கடிக்கப்பட்ட தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குத் தாஸர்களாக வாழத் தொடங்கினர்.
அந்த
அடிமைகள் பிறருக்குத் தானமாகவும் கொடுக்கப்பட்டனர் என்பதை ஒரு ரிஷி தான்
100 தாஸர்களைப்
பெற்ற விவரத்தைக் கூறுவதிலிருந்து அறிகிறோம்.3
அந்த தாஸர்கள்
நன்றாக உழைத்தார்கள் என்பது நான் தாஸனைப் போலக் கடுமையாக தேவர்களுக்கு உழைத்தேன்
என்பதிலிருந்து தெரிகிறது.4
சமூக விரோதிகளைத்
தற்காலத்தில் காவலர்கள் சிறைப்படுத்தி வேலை செய்ய வைப்பது போல இருந்திருக்க வேண்டும்
என்பது தெரிகிறது. தண்டனையால் மனம் திருந்திய
தாஸர்கள்
கொடையாளிகளாக மாறினாலும் தங்கள் பழைய பெயராலேயே அழைக்கப்பட்டார்கள் என்பதை முன் சொன்ன
பல்பூதன்,
தருக்ஷன்
பற்றிய குறிப்பிலிருந்து அறிகிறோம்.
ஆர்யர்களாக
இருந்தவர்களில் கூடச் சிலர் காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாறியிருப்பர்.
அவர்கள்
பழைய பெயரால் ஆர்யர்கள் என்று கூறப்பட்டாலும் எதிரிகளாகக் கருதப்பட்டனர்.
எங்கள்
எதிரிகளைக் கொல்வாயாக, அவர்கள் தாஸர்களானாலும்,
ஆரியர்களானாலும்
என்ற
வேண்டுதல் காணப்படுகிறது.5
பொது உடைமைப்
பொருட்களை அபகரிப்பவரே தஸ்யு என்னும் இந்த உருவகப் பொருள் ஜ்யோதியை எந்தத் தஸ்யு அபகரிக்க
முடியும் என்பதை விளக்கவில்லை.
இது வரையில்
மூன்று வகையான உருவகப் பொருள்களைப் பார்த்தோம்- மேகங்களை
அழித்து மழை பொழியச் செய்தல், நிலச் சரிவை
அகற்றி நீர் மற்றும் பசுக்களின் பாதையைத் திறந்து விடுதல், பொது
உடமைப் பொருட்களை அபகரிக்கும் சமூக விரோதிகளைத் தண்டித்தல்.
இந்த
மூன்றுமே தஸ்யு பற்றிய எல்லாச் செயல்களையும் விளக்கவில்லை. இருப்பினும்
இவற்றை முழுமையாகத் தள்ளிவிடவும் முடியாது. ஒவ்வோரிடத்தில்
ஒவ்வொரு உருவகம் பொருத்தமாக இருக்கும். அதை அங்கு ஏற்றுக்
கொள்ளலாம்.
குறிப்புகள்
1 1.117.21, 7.5.6 2 1.126.3
3
8.56.37 4 7.86.75
5 10.38.3
Pl continue your blog, very informative
ReplyDelete