பிற்காலத்து
ஆசார்யர்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்தபடியைச்
சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும் ஆதலால் அது வேதத்தைக் காட்டிலும்
உயர்ந்ததென்றும் கருதுவாராயினர். இங்ஙனம் பிற்காலத்து ஆசாரியர்கள் நினைப்பதற்கு
உண்டான காரணங்கள் பல. அவற்றுட் சிலவற்றை இங்கே தருகிறேன். முதலாவது காரணம், வேத பாஷை மிகவும் பழைமைப்பட்டுப் போனபடியால் அதன் உண்மையான
பொருளைக் கண்டுபிடித்தல் மிகவும் துர்லபமாய்விட்டது. நிருக்தம் என்ற வேத
நிகண்டையும் பிராம்மணங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளிலே காணப்படும் வேத மந்திர
விளக்கங்களையும் சுற்ற பின்னரே, ஒருவாறு வேத மந்திரங்களின் பொருளையறிதல்
சாத்தியமாயிற்று. வேதம் பிரம்மாண்ட நூல். அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வார் மிக
மிகச் சிலரேயாவார். இப்போது வேதத்திற்கு விளக்குப் போல நிற்கும் ஸாயணரென்ற
வித்யாரண்ய சங்கராச்சாரியரின் பாஷ்யம் பிராம்மணங்களையும் நிருக்தத்தையுமே
ஆதாரமாகவுடையது. பிராம்மணங்களில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளும் கற்பிதப்
பொருளுமே கூறப்பட்டிருக்கின்றன. நிருக்தத்திலோ என்றால் பெரும்பாலும் வேத
பதங்களுக்குச் சரியான பொருளே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சம்சயத்துக்கு
இடமாகவும் சில இடங்களில் அதன் பொருள்களே பிழைபட்டதாகவும் இருக்கிறது. - பாரதி
ஸம்ஹிதைகள் பழைய, மிகப் பழைய ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருக்கின்றன.
அதாவது, வேதங்களின் ஸம்ஸ்கிருதம் மதுரைச் சங்கத்துக்கு
முந்திய தமிழைப் போலவும் உபநிஷத்துக்களின் பாஷை சங்கத்துக்குப் பிந்திய தமிழைப்
போலவும் இருக்கின்றன. ஆனால், இந்த உவமானம் முற்றிலும் பொருந்ததாகக்
கூறலாகாது. இன்னும் அதை உள்ளபடி விளக்குமிடத்தே. ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா
நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம் - அதாவது, ஸம்ஹிதை மாத்திரம் - தனியான பாஷையாக இருக்கிறது. இஃதொரு
பெருவியப்பு அன்றோ? வேத ஸம்ஸ்கிருதம் வேறெந்த நூலிலும் கிடையாது. -
பாரதி
ரிஷிகள்
உள்ளத்தைத் தெளிவு செய்து கொண்டோர். ஆதலால் அடிவரை எளிதாகப் பாய்ந்து அங்கிருந்து
மந்திரம் கொண்டுவந்தனர். – பாரதி.
ரிக் வேத மொழி
பாணினியின் ஸம்ஸ்கிருதத்திலிருந்து மிக வேறுபடுகிறது. எனவே ஸம்ஸ்கிருதம் மட்டும்
கற்றால் வேதத்தைப் படித்துவிட முடியாது. பிற்கால ஸம்ஸ்கிருத இலக்கிய வழக்கில்
இல்லாத சொற்கள் வேதத்தில் பல உண்டு. சில சொற்களுக்கு வேதத்தில் பொருள் வேறு, பிற்கால இலக்கியத்தில் வேறு பொருள். இலக்கண விதிகளும் சில
இடங்களில் வேறுபடுகின்றன.
இத்தனைக்கும்
மேல் பெரும் இடர்ப்பாடு என்னவென்றால் வேத ரிஷிகள் சில இடங்களில் இலக்கணத்தைப்
பற்றிக் கவலைப் படவில்லை. ஒரு உதாரணம் பார்ப்போம்.
மிகுந்த
வலிமையுடைய இந்திரனுக்கு பிரார்த்தனைகளை அனுப்புங்கள். பசுக்கள். இந்திரனுக்கு
நிறைய தோத்திரங்களைச் செய்யுங்கள்.1
இந்த
மந்திரத்தில் பசுக்கள் என்பது எந்த வாக்கியத்தோடும் ஒட்டாமல் நிற்கிறது. நம்முடைய
பசுக்கள் செழிப்பதற்காக என்று சாயணர் விளக்கம் தருகிறார். பசுக்கள் தரும் பாலைக்
கொண்டு என்றோ பசுக்களைப் பலியிட்டு என்றோ கூட விளக்க முடியும். மூன்றுமே ரிக்
வேதத்தின் பிற பகுதிகளில் சொல்லப்பட்ட கருத்துடன் ஒத்துப் போகின்றன. ரிஷியின்
மனதில் இருந்த கருத்து எது என்பதை அறிய முடியவில்லை.
ரிஷிகள் கவிதை
எழுதப் போகிறேன் என்று திட்டமிட்டு உட்கார்ந்து எழுதிய கவிதைகள் அல்ல இவை. அருள்
நிலையில் அவர்கள் மனதில் தோன்றியவை. அதனால் அதில் இலக்கணத்தை எதிர்பார்க்க
முடியாது.
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா,
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா அந்தக்
கிறுகிறுப்பில் உளறு மொழி பொறுப்பாயடா
என்று கவிஞர் தேசிய விநாயகம் பிள்ளை பாடினார். தெய்வ ஆவேசத்தின்
கிறுகிறுப்பில் பாடிய வேத ரிஷிகளின் மொழி, இலக்கணம் பற்றிக் கவலைப்படாத மொழியாக இருப்பதில் ஆச்சரியம்
இல்லை.
இன்னொரு
காரணமும் இருக்கலாம். காலப் போக்கில் மனப்பாடம் செய்தோரின் கவனக்குறைவு காரணமாக
ஓரொரு எழுத்து மாறியிருக்கலாம். அது இலக்கணப் பிழையாகக் கருதப்பட்டிருக்கலாம்.
இது ரிஷியின்
இலக்கணப் பிழையா, அல்லது ஏடெழுதியவரின் கைப் பிழையா அல்லது மனப்பாடம்
செய்தவரின் நினைவுப் பிழையா என்பது பற்றிக் கவலைப் படாமல் இன்று நமக்குக்
கிடைத்திருக்கும் பாடத்தில் முடிந்த வரை பொருள் அறிய முயல்வோம்.
வேதத்தில் சில
பாடல்கள் மிகச் சாதாரணமானவை. உதாரணமாக, ரிக் 5.27 என்ற சூக்தம் அக்னியைக் குறித்துப் பாடப்பட்டதாக
அனுக்ரமணிகா (அட்டவணை) சொல்கிறது. பொருளைப் பார்த்தால்- த்ரயருணன் என்ற
அரசன் எனக்கு ஒரு வண்டியும் இரண்டு காளைகளும் நூறு பொற்காசுகளும் இரண்டு
குதிரைகளும் கொடுத்துள்ளான். ஏ அக்னியே, அவனுக்கு மகிழ்ச்சி கொடு
என்று இவ்வாறு
செல்கிறது.
பண்டைத்
தமிழ்ப் புலவர்கள் அரசனிடம் பரிசு பெற்றுப் புகழ்ந்து பாடியதாக அறிகிறோம்.
அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இந்து சமயத்தின் ஆணி வேர் என்று சொல்லக் கூடிய ஆன்மிகக்
கருத்து இதில் என்ன இருக்கிறது? புரவலரைப் போற்றும் இந்தப் பாடலுக்கு வேதம் என்ற பெரிய
மரியாதை எதற்கு? என்று தோன்றுகிறது.
இலக்கணப்
பிரச்சினைகள் இல்லாமல் எல்லாச் சொற்களும் பொருள் தெரிந்த சொற்களாக இருக்கும்போது
கூட பல இடங்களில் சொற்களின் பொருளைத் தொகுத்துக் கூறும்போது இடர்ப்பாடுகள்
வருகின்றன. பல பாடல்கள் விடுகதை போல உள்ளன. ஒரு உதாரணம் பார்ப்போம்.
காலில்லாதவள்
காலுள்ளவர்களுக்கு முன்னதாகப் போகிறாள். தலையை அசைய வைத்து, நாக்கைப் பேச வைத்து முப்பது அடிகள் பயணிக்கிறாள்.2
இதற்கு சாயணர்
அளிக்கும் விளக்கம்- சுயமான அசைவு இல்லாமல் சூரியனால் தள்ளப்பட்டு வருவதால்
காலில்லாதவள் உஷா (வைகறைப் பொழுது). கால் உள்ள பிராணிகள் எழுந்து சஞ்சரிக்கும்
முன்னர் அவள் புறப்பட்டு விடுகிறாள். சத்தமி்ல்லாமல் தூங்கிக் கொண்டிருந்த
மக்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிப் பேச வைக்கிறாள்.
இது
பொருத்தமாகத் தோன்றுகிறது என்றாலும் இது தான் ரிஷியின் மனதில் இருந்த எண்ணமா
என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள முடியவில்லை.
அசுவினி
தேவர்களைக் குறித்துப் பாடப்பட்ட ரிக் இது.
இந்தப்
பிரார்த்தனை உசத்யனின் மகனாகிய என்னைக் காப்பாற்றட்டும். இந்த இரண்டு பறவைகளும்
என்னைக் கறக்காமல் இருக்கட்டும். பத்துப் பத்தாகக் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த
விறகுகள் என்னை எரிக்காமல் இருக்கட்டும். உங்கள் இருவருடனும் கட்டப்பட்ட இது
தானாகவே பூமியைத் தின்கிறது.3
அந்தப்
பறவைகள் என்பது இரவும் பகலும். அவை ரிஷியின் சக்தியை வலுக்கட்டாயமாக
உறிஞ்சிவிடுகின்றன. வயதான காலத்தில் ரிஷியின் குனிந்து நடக்கும் உடல் பூமியைத்
தின்பதாக சாயணர் குறிப்பிடுகிறார். சாயணர் உரை இல்லாவிட்டால் விடுகதை போன்ற
இத்தகைய பாடல்களைப் புரிந்துகொள்ள முடியாது. இதில் வரும் விறகு எதைக் குறிப்பது
என்பது புரியாத புதிராகவே உள்ளது.
மற்றொரு
மந்திரத்தின் மொழிபெயர்ப்பு இது.
இன்றும்
இல்லை, நாளையும் இல்லை, யாரறிவார் இந்த அற்புதத்தை? அடுத்தவர் மனமோ அலை பாய்கிறது. கற்றது யாவும் மறந்து
போயின.4
இந்திரன்
தனக்கு ஹவிர் பாகம் கிடைக்கவில்லை என்று வருந்தும் போது அகஸ்தியரிடம் இதைச்
சொல்வதாகச் சாயணர் கூறுகிறார். இதற்கு முன் பின் உள்ள மந்திரங்களின் துணை கொண்டு
பார்த்தாலும் இதற்கு என்ன பொருள் என்பது விளங்கவில்லை.
இது போன்ற
ஆயிரக் கணக்கான மந்திரங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக
அர்த்தம் பண்ணிக் கொள்ள இடம் அளிக்கின்றன. அதனால் வேதத்தின் உண்மையான கருத்து என்ன
என்பதே அறிய முடியாமல் அது மறையாகவே இருக்கிறது.
இத்தகைய
விடுகதை போன்ற மந்திரங்களை நீக்கிவிட்டு மற்ற மந்திரங்களைக் கொண்டு ரிக் வேதத்தின்
சாரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முயல்வோம்.
குறிப்புகள்
இரண்டாவது பத்தியில் கொடுக்கப்பட்ட எண்கள் முறையே ரிக்
வேதம் மண்டலம், சூக்தம், மந்திரத்தைக் குறிக்கும்.
4 1.170.1
No comments:
Post a Comment