சிற்சில
பதங்களுக்கு சாயணாசாரியர் சொல்லும் உரை பிரத்தியக்ஷமாகப் பிழையென்று தோன்றினும், பொதுப்படையாகச் சொல்லுமிடத்தே தற்காலத்து ஹிந்து
வைதிகர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கும் ஸாயண பாஷ்யமே பூர்வ
வியாக்கியானங்களுக்கு விரோதமில்லாமலும், தெளிவாகவும், உண்மையாகவும் அமைந்திருக்கிறது.
எனினும், சாயணாச்சாரியர் கூடத் தம்முடைய குருக்களைப் போலவே வேதம்
கர்ம நூலென்று கருதிவிட்டார். அதனால் அது ஹிந்து மதத்துக்கு ஆதிவேர் என்பதை இந்த
ஆசாரியர்களால் மறுக்க முடியாவிடினும், அதற்கு ஞானநெறியில் எவ்விதப் பிரமாணமுமில்லை யென்று
அவர்கள் தவறாக எண்ணும்படி நேர்ந்து விட்டது. ஏனென்றால், வேதத்தைக் கர்மங்களைப் போற்றும் நூலாகக் கருதிய இவர்கள்
கர்மங்களென்ற இடத்தே யாகங்களைக் கருதிக் கூறினர். அதாவது, யாகங்களுக்கு மாத்திரம் உபயோகப்படும் நூலாக எண்ணி, கர்மங்கள் என்றால் யாகங்களெனப் பொருள் கொண்டு இவர்கள்
வேதத்தைக் கர்ம காண்டம் என்றார்கள். -பாரதி
சாயணாசாரியார் உரை
வேத ரிஷிகளின்
அருள் மொழிகள் யாகங்களையே கருப்பொருளாக உடையன என்னும் கருத்து பிராமணங்கள்
எழுதப்பட்ட காலத்திலேயே தோன்றிவிட்டது. பிராமணங்கள் வெவ்வேறு வகையான யாகங்களைக்
குறிப்பிடுகின்றன. வேதத்தில் கூறப்பட்ட சொற்களுக்கு அவை அளிக்கும் விளக்கம் யாகச்
சார்புடையனவாகவே இருக்கின்றன. இந்தப்
போக்கை அப்பொழுதே சிலர் எதிர்த்திருக்கிறார்கள். அவர்களால் தான் உபநிடதங்கள்
எழுதப்பட்டன. எந்த விதமான யாகமும் வேண்டாம், பிரம்மத்தைப் பற்றிச் சிந்திப்பது தான் கடைத்தேறும் வழி
என்றன உபநிடதங்கள்.
ஆனால் உபநிடதக்காரர்கள் ஸம்ஹிதைகளை வார்த்தைக்கு வார்த்தை
பொருள் கண்டு பிடித்து விளக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. வேதத்தின் பொதுவான
கருத்து உருவமற்ற குணமற்ற பிரமம் தான் என்று விளக்குவதில் அவர்கள்
ஈடுபட்டனர்.
சாயணர் எல்லாவற்றையும் யாகக் கண் கொண்டே பார்க்கிறார். பொருள்
தெளிவாகத் தெரியும் இடத்தில் கூடத் தேவை இல்லாமல் யாகக் கண்ணோட்டத்தில் விளக்கம்
தருகிறார். உதாரணமாக, 8.66.4 இல் “புதைக்கப்பட்டிருக்கும் செல்வத்தை இந்திரன் தன் பக்தர்களுக்குத்
தருகிறான்” என்று வருகிறது. ‘யக்ஞத்தால்
போற்றப்பட்டவுடன்’ என்று சாயணர் சேர்க்கிறார். அதே போல, 8.63.8 இல் “நீ
என் ரதத்தின் சக்கரம் செல்லும் பாதையைக் காப்பாற்று” என்று
வருகிறது. ‘நான் யக்ஞத்துக்குச் செல்லும்போது’ என்ற தொடரைச் சாயணர் சேர்க்கிறார்.
சாயணருக்கு முன் ஸ்கந்த ஸ்வாமி, நாராயணர், உத்கீதர், மாதவ பட்டர், வேங்கட மாதவர், தானுஷ்க யஜ்வா, ஆனந்த தீர்த்தர் என்ற மத்வாசார்யர், ஆத்மானந்தர் ஆகியோர் ரிக் வேதத்துக்கு உரை எழுதியுள்ளனர்.
ஆனால் இன்று நமக்குக் கிடைக்கும் ஒரே முழுமையான உரை சாயணருடையது தான். அவரது உரையை
அடிப்படையாகக் கொண்டு தான் மேலை நாட்டவரும் தற்போதைய இந்திய வேத இயல் அறிஞர்களும்
வேத ஆராய்ச்சியைத் துவக்கி புதிய பொருள் காண முயன்று வருகின்றனர். ஸாயண
பாஷ்யமில்லாவிட்டால், வேதம் ஹிந்து ஜாதிக்குப் பயன்படாமலே போயிருக்கும். சரியான
சமயத்தில் ஸாயணர் வேதங்களுக்கு பாஷ்யம் எழுதி வைத்தார் என்று பாரதி கூறுவது கவனிக்கத்தக்கது.
மாக்ஸ்முல்லர்
மேலை
நாட்டு வேத ஆராய்ச்சியாளர்களில் குறிப்பிடத் தக்கவர் மாக்ஸ்முல்லர். அவர்
இந்தியாவிற்கு வந்ததில்லை. ஆனால் அவருக்கு முன் பல ஜெர்மானியர்கள் எழுதிய, பதிப்பித்த புத்தகங்கள் மற்றும் இந்தியாவில் அவரது
நண்பர்கள் மூலம் சேகரித்த ஏட்டுச்சுவடிகளின் அடிப்படையில் ஆராய்ந்து ரிக்
வேதத்திற்கு ஒரு முழுமையான உரை எழுதினார். சாயணர் உரை எழுதிய ஏட்டுச் சுவடிகள்
அவருக்குக் கிடைத்தவை 12. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தன. (சாயணர் உரையிலேயே பல இடைச் செருகல்கள் புகுந்துள்ளன என்பது
தெரிகிறது.) சிறு வேறுபாடுகளை எல்லாம் பொருட்படுத்தாமல் வகைப்படுத்தியதில் அவை மூன்று
பிரிவுகளில் அடங்கின. ஒன்றுக்கொன்று பெருத்த வேறுபாடு உடைய அவற்றில் எது உண்மையான
பொருள் என்று கண்டுபிடிப்பது மிகுந்த சிரமமான வேலை. அதனால் அவருக்கு இந்த வேலையை
முடிக்க 45 ஆண்டுகள் ஆயின.
வாழ்க்கையின்
பெரும் பகுதியை இந்த ஆராய்ச்சியிலேயே அவர் செலவழித்த பின்னரும் அவரால் வேதத்தின்
மேலெழுந்தவாரியான பொருளைத் தான் அறிய முடிந்தது. எனவே அவர் வேதம் என்பது பல வகையான
பழங்கால நம்பிக்கைகள் கொண்டதும் பல வேறு தெய்வங்களைப் போற்றுவதுமான நாகரிகமற்ற
கூட்டத்தினரின் ஒரு நூல் என்று தான் கருதினார். மேலும், இந்தியாவில் புதிதாகக் குடியேறிய ஒரு கூட்டம் மாறுபட்ட சமய
நம்பிக்கைகள் கொண்ட பழங்குடியினரின் எதிர்ப்பை எதிர் கொண்ட நிலையை அது குறிப்பிடுவதாகவே
அவர் முடிவு கட்டினார்.
அவர்
அமைத்துக் கொடுத்த பாதையில் பயணம் செய்த பிற்கால ஆராய்ச்சியாளர்கள் வேதத்தினுள்
ஆழமாகச் செல்ல முடிந்தது. அவர்கள் வேதத்தின் உண்மையான கருத்தை அறிய முயன்று வருகின்றனர். மாக்ஸ்முல்லரின் இனப்
போராட்டக் கருத்தைப் பலரும் மறுத்துள்ளனர். ஆனாலும் இன்று வரை வரலாற்றுப்
புத்தகங்களில் மாக்ஸ்முல்லரின் கருத்தே நிலைபெற்றுள்ளது.
ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி
இதற்கு எதிர்
வினையாகக் கிளம்பியவர் ஆர்ய ஸமாஜ நிறுவனர் ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி. இந்தியரின் பல
தெய்வக் கொள்கை, உருவ வழிபாடு, ஜாதி முறை இவற்றைக் கிருத்துவர்களும் இஸ்லாமியரும் குறை
கூறியது அவருக்கு உகப்பாக இல்லை. இந்து சமயம் பல வேறு காலங்களில் பல வேறு
தாக்கங்களுக்கு உட்பட்டு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை அவரால் ஒப்புக் கொள்ள
முடியவில்லை.
“வேதம் அநாதியானது, இறைவனின் வாக்கு அது. அதில் இல்லாதது இல்லை. இன்று புதிதாக
வந்திருக்கும் ஆகாய விமானம், தொலைபேசி, ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்பட எல்லாமே
வேதத்தில் உண்டு. அஹிம்சைக் கொள்கை புத்த மதத்திலிருந்து பெறப்பட்டது அல்ல. அது
இங்கிருந்து தான் புத்த மதத்திற்குப் போயிற்று. வேதத்தில் ஒரு தெய்வக் கொள்கை தான்
இருக்கிறது, உருவ வழிபாடு இல்லை, ஜாதி முறைகள் இல்லை” என்று நிரூபிக்க விரும்பின அவர் வேதத்துக்குப் புதிய பொருள்
கண்டார். வேதச் சொற்களின் வேரை ஆராய்ந்து சாயணரும் மாக்ஸ்முல்லரும் சொல்லாத புதிய
பொருள் உரைத்தார். சில இடங்களில் அவர் சொல்வது பொருத்தமாக இருந்தாலும் பெரும்பாலான
இடங்களில் அவர் வலிந்து பொருள் கொள்வது நன்கு வெளிப்படுகிறது.
உதாரணமாக, ரிக் 1.162 சூக்தம் முழுவதும் யாகத்தில் குதிரையைப் பலி
இடுவது பற்றியது. பலியிடப்பட்ட குதிரை தேவ லோகம் செல்லும்போது, அதன் உடலின் எல்லாப் பகுதிகளும், பலியிடுவதற்கு முன் அதன் வாயில் வைக்கப்பட்ட புல் உள்பட, எல்லாம் கூடவே போகட்டும் என்று வேண்டப்படுகிறது. அதில்
9வது மந்திரத்தின் சாயணர் உரையின் தமிழ் மொழி பெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குதிரையின் மாமிசத்தில் ஈக்கள் சாப்பிட்டது, வெட்டும் கத்தியிலும் தடவும் குச்சியிலும் ஒட்டிக்
கொண்டிருப்பது, மாமிசத்தை எரிப்பவருடைய கைகளிலும் நகங்களிலும் ஒட்டிக்
கொண்டிருப்பது இவை எல்லாம், தேவர்களிடத்தில் நீ போய்ச் சேரும்போது, உன்னுடன்
இருக்கட்டும்.
இதே
மந்திரத்துக்கு தயானந்தர் அளிக்கும் விளக்கம் துளிக்கூட சம்பந்தம் இல்லாமல்
இருக்கிறது. எந்த அகராதியிலும் இல்லாத புது அர்த்தத்தை எந்த நியாயமும் இன்றி அவர்
ஏற்படுத்தியிருப்பதைக் கீழ்க்கண்ட மொழிபெயர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
வேலைக்காரர்கள் குதிரையை துர்க்கந்தம் இல்லாததாக, ஈ இல்லாததாக வைத்திருக்க வேண்டும். தன் கையினாலும்
கயிற்றினாலும் உயர்ந்த நியமத்துடன் தன் விருப்பம் போல் செலுத்த வேண்டும். அவ்வாறு
செய்தால் குதிரை நன்றாக வேலை செய்யும்.
க்ரவிஷ என்ற
சொல்லுக்கு மாமிசம் என்பது தான் பொருள். அப்படித் தான் எல்லா இடங்களிலும் பொருள்
கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. தயானந்தர் அதற்கு விரைவாகச் செல்லும் என்று பொருள்
தருகிறார். அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் க்ர என்றால் செல்வது என்று பொருள்.
அதிலிருந்து வருவதால் க்ரவிஷ என்பது விரைவாகச் செல்கின்ற எனப் பொருள்படும் என்று
விளக்குகிறார். இத்தகைய சுற்றி வளைத்துப் பொருள் கொள்ளும் முறையைப் பயன்படுத்தத்
தொடங்கினால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.
மேலை நாட்டவர்
இந்து சமயத்தைப் பற்றிக் குறையாகக் கூறியவற்றை மறுப்பதே நோக்கமாகக் கொண்டு
செயல்பட்டார் தயானந்தர். புலால் உண்ணாமைக்
கொள்கையை இந்து சமயம் சமண புத்த சமயங்களிலிருந்து பெற்றது என்பதை ஒப்புக் கொள்ள
அவர் விரும்பவில்லை.
எந்த சமயமும்
தான் நிறுவப்பட்ட காலத்தில் இருந்தது போலவே இல்லாமல் காலப்போக்கில் தன்னைத் தானே
திருத்திக் கொள்வது தான் வளர்ச்சியாகும். அது அந்த சமயத்தை வலுவாக்கும். தன்
தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளாத சமயம் அழி்ந்து விடும். வேதத்தில் கூறப்படாத
எத்தனையோ விஷயங்கள் இன்றைய இந்து சமயத்தில் உள்ளன. அவை காலப் போக்கில்
தேவைக்கேற்பச் செய்து கொள்ளப்பட்ட மாற்றங்கள். அவற்றை நீக்கி விட்டு வேத காலத்தில்
இருந்த நிலைமைக்கே திரும்பிப் போக வேண்டும் என்று கூறுவது பிற்போக்கானது.
தயானந்தரால்
ஏற்பட்ட ஒரு நன்மை, வேதத்திற்கு அர்த்தம் பார்க்கக் கூடாது என்ற பயம் நீங்கி
அதை ஆராய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது தான்.
அரவிந்த கோஷ்
அரவிந்தர்,
வேதத்தின் ரகசியம் என்ற நூலில் வேதம் முழுவதும் மனவியல்
குறியீடுகளைக் கொண்டது என்று சொல்லி அதற்கேற்ப சில மந்திரங்களை மொழி பெயர்த்துக்
காட்டினார். அக்னி என்பது ஞான சக்தி, தெய்விகமான அறிவுத் துணிவு (illuminated
divine will). இந்திரன்
என்பது விஞ்ஞான சக்தி (pure illuminated intelligence). பசு என்பது ஞான ஒளி என்று பொருள் கொள்ள வேண்டும் என்றார்.
அவரது சீடர்கள் அவர் வழி நின்று ரிக் வேதம் முழுவதற்கும் உரை எழுதியுள்ளனர். ஓரிரு
மந்திரங்களில் அவரது குறியீடுகள் பொருத்தமாக உள்ளன என்பது உண்மை என்றாலும் எல்லா
இடங்களிலும் அக் குறியீடுகள் பொருந்த வில்லை. மேலும் ஞான சக்தி, விஞ்ஞான சக்தி என்பவை பாமரர்களுக்குப் புரிவதில்லை.
சொற்களுக்குப்
பொருள் காண்பதில் அபிதா (நேர்ப் பொருள்), லக்ஷணா (உருவகப்
பொருள்) என இரு வகை உண்டு. ஒரு உதாரணம் பார்ப்போம்.
எங்கள் வீட்டு
நாய் குரைப்பதே இல்லை. யாரேனும் வந்தால் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு
மீண்டும் கண்களை மூடிக் கொள்ளும். இந்த வாக்கியத்தில் நாய் என்பது எல்லோருக்கும் தெரிந்த அந்த நாலு கால்
பிராணியைத் தான் குறிக்கும். இது அபிதா.
ஐயா, நீங்கள்
செய்த உதவியை மறக்க மாட்டேன். என்றும் உங்கள் காலடியில் நாயாக இருப்பேன். – இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு நேர்ப் பொருள்
பொருந்தாது. இங்கு அதற்கு நன்றி உடையவன்
என்பது பொருள். இது லக்ஷணா எனப்படும்.
லக்ஷணாவில்
ஒரு சொல்லுக்கு ஒரு உருவகப் பொருள் தான் என்ற கட்டுப்பாடு கிடையாது. கீழ்க்கண்ட
வாக்கியங்களைக் கவனியுங்கள்.
ஊரைச் சுற்றி
வெள்ளம். வெளி உலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. நூறு பேர் ஒரு மேடான
இடத்தில் கூடி நின்றனர். எல்லோருக்கும் பசி. உணவுக்கு வழி இல்லை. அப்பொழுது ஒரு
ஹெலிகாப்டர் வந்தது. இருபது உணவுப் பொட்டலங்களைப் போட்டு விட்டுப் போய் விட்டது.
அவ்வளவு தான். மனிதர்கள் நாய்கள் ஆயினர். - இந்த
வாக்கியத்தில் நாய் என்பதற்கு தந்நலமே பெரிதாகக் கருதிச் சண்டை போடுபவர் என்று
பொருள்.
வீட்டில்
எல்லோரும் அவரவர் வேலையாக வெளியில் போய்விட்டார்கள். நான் தான் இங்கு நாயாக
காவல் காத்துக் கொண்டிருக்கிறேன். - இந்த வாக்கியத்தில் நாய் என்பதற்கு காவல் காப்பவர் என்று பொருள்.
வேலை தேடி நாயாக
அலைகிறான். – இந்த
வாக்கியத்தில் நாய் என்பதற்குப் பயனின்றி அலைபவர் என்பது பொருள்.
இப்படி
வேதத்திலும் ஒரு சொல்லுக்குப் பல உருவகப் பொருள்கள் உள்ளன. அரவிந்தரின் சீடர்களின்
உரை இந்த வேறுபாட்டைக் கணக்கில் கொள்ளாமல் எல்லாவற்றிற்கும், அபிதாவாக வரும்
இடங்களில் கூட ஒரே உருவகப் பொருளைக்
கூறுகிறது.
இந்த அரசன்
எனக்கு 100 பசுக்களைக் கொடுத்தான் என்பதற்கு 100 ஒளிக் கிரணங்களைக் கொடுத்தான்
என்பது எவ்வளவு பொருத்தமில்லாமல் இருக்கிறது என்பது பார்த்தாலே தெரியும்.
மேலும்,
லக்ஷணாவில் சொல்லுக்கும் உருவகப் பொருளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க வேண்டும்.
அரவிந்தர் பசுவைக் ஞான ஒளி என்றும், நெய்யை அறிவுத் தெளிவு என்றும் பொருள்
கொள்கிறார். எப்படித் தொடர்பு படுத்துகிறார் என்பது விளக்கப்படவில்லை.
வேத மொழியோ
வழக்கிழந்தது. இலக்கணமும் மாறுபடுகிறது. இடைச் செருகல்களும் பல உள்ளன.
மந்திரங்களில் பல விடை தெரியாத புதிர்களாக உள்ளன. நமக்குக் கிடைக்கும் பழமையான ஒரே
உரையோ ஒரு சார்பு உடையது. பிற்கால உரைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறை. இவ்வாறு, வேதத்திற்குப் பொருள் பார்க்க முனையும் போது சந்திக்க
நேரும் சங்கடங்கள் பல. இத்தனை காலம் இத்தனை பேர் முயன்று பார்த்து இயலாத காரியம்
என்று கை விட்டு மூலத்தை மட்டும் அதன் ஒலி வடிவில் காப்பாற்றி வந்தால் போதும்
என்று முடிவு கட்டி விட்ட நிலையில் பாமரன் மட்டும் என்ன சாதிக்க முடியும்?
எல்லா
உரைகளும் ஒவ்வொரு சார்பு உடையது என்றாலும் இருப்பவற்றுள் சாயணர் உரை தான்
பழமையானதும் முழுமையானதும் ஆன உரை என்பதால் அதைப் பிரதானமாகக் கொண்டு,
அதனுடைய குறைகளைக் கூடியவரை களைந்து பொருள் காண முயன்றான்
பாமரன்.
வேதத்தில் ஒவ்வொரு
சொல்லுக்கும் பல பொருள்கள் உண்டு. அவற்றில் ஒன்று பிரதானமானதாக இருக்கும்,
மிகுதியாகப் பயன்படுத்தப்படும். சில இடங்களில் பொருள் மாறுபடும். பிரதானமான பொருளை
விட்டு ஓரிடத்தில் சிறப்பான பொருள் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு முன் சில
விஷயங்களைக் கவனிக்க வேண்டும். வழக்கமான பொருள் இந்த இடத்தில் பொருந்துமா? பொருந்தாது என்றால் வேறு எந்தப் பொருள்
பொருந்தும்? அந்தப் புதுப் பொருளைப் பயன்படுத்த வேதத்தில்
முன் உதாரணங்கள் உண்டா? என்பனவற்றை ஆராய வேண்டும். வேதச் சொல்லின்
பல விதமான பொருள்கள் கூடியவரை வேதத்திலேயே தேடப்பட வேண்டும். பிற்கால நூல்களில்
வழங்கும் பொருளை வேதத்தில் நுழைப்பது தவறு.
இந்தக் கொள்கைகளின் அடிப்படையிலான வழிமுறையே
இந்நூலில் பின்பற்றப்பட்டிருக்கிறது.
உதாரணமாக,
அசுரர் என்ற சொல்லுக்குப் பல வகையான பொருள்கள் சாயணரால்
தரப்பட்டுள்ளன. அவற்றில் வலிமையானவர் என்ற பொருள் பிரதானமானதாக இருக்கிறது. சாயணர்
சில இடங்களில் ராட்சசர் என்றும் யாகங்களை அழிப்பவர் என்றும்,
சில இடங்களில் நேர் மாறாக, அசுரர்களை அழிப்பவர் என்றும் பொருள் கூறுகிறார். அந்த
இடங்களிலும் வலிமையானவர் என்ற பொருளே பொருத்தமாக இருக்கும் போது புதிய பொருள் காண
அவசியமே இல்லை. தேவை இல்லாமல் யாகச் சார்பு திணிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
அசுரர் பற்றி எழுதப்பட்டுள்ள அத்தியாயத்தில் இதைக் காணலாம்.
No comments:
Post a Comment