வருணன், மித்ரன், அர்யமான், பகன், அம்சன்
என்ற ஐந்து தேவர்களை ஆதித்யர் என்று வேதம்
சிறப்பித்தாலும் பகனுக்கும் அம்சனுக்கும் தனியான மந்திரங்கள் இல்லை. மித்ரன்
வருணன் அர்யமான் மூவரும் சேர்த்தே சில இடங்களில் போற்றப்படுகிறார்கள்.
பல இடங்களில் மித்ரனும் வருணனும் சேர்த்துப்
பேசப்படுகிறார்கள். இவர்களிலும் வருணனே மிகுதியாகத் துதிக்கப்படுகிறார்.
மற்ற இருவரது தன்மைகள் சாதனைகள் வருணனின் தன்மைகள்
சாதனைகளிலிருந்து வேறுபடாமல் உள்ளன. அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு கீழே தரப்படுகின்றன.
வலிமை
மிக்கவராதலால் அசுரர் என்றும் அறிவு மிக்கவராதலால் கவிதமர் என்றும் அதிசய சக்திகள்
பெற்றிருப்பதால் மாயாவான் என்றும் வருணன் கூறப்படுகிறார்.
ராஜா, சம்ராட் என்ற சிறப்பு ரிக் வேதத்தில் இவருக்குத் தான்
மிகுதியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மித்ர வருணர்களும்
நர என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களும் மனிதர்களாக, நீதி தவறாமல் ஆட்சி செய்த
அரசர்களாக, இருந்து உயர்ந்தவர்களாக இருக்கக் கூடும். ஆனால் வேதத்தில் கூறப்பட்ட
இவர்களது சாதனைகள் முழுவதும் தெய்விகச் சாதனைகளாக உள்ளனவே அன்றி இந்திரனைப் போல
மானிடச் சாதனைகள் எதுவும் இவர்கள் செய்ததாகக் கூறப்படவில்லை.
எல்லாத்
தேவர்களும் ருதத்தை(தர்மத்தை)க் காப்பாற்றுவோராகக் கூறப்பட்டாலும் வருண
மித்ரனுக்கு ருதத்தில் முக்கியப் பங்கு உண்டு. அவர்கள் ருதத்தின் தலைவர்கள்.
ருதத்தைக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள். ஒவ்வொரு அடியிலும்
விரதத்தை அனுசரிக்கிறார்கள். இவர்களே பெரிய ருதம் ஆக இருக்கிறார்கள். இவர்கள்
நிலையான தர்மங்களை மீறுவதில்லை. தர்மத்தாலும் மாயையாலும் விரதங்களைக்
காக்கிறார்கள், ருதத்தால் ஆள்கிறார்கள்.
இயற்கை நியதியின் தலைவராக வருணன் செய்த செயல்களாவன-
பலியிடப்பட்ட மிருகத்தின் தோலை விரிப்பது போல பூமியை விரித்தார். சூரியன் பூமியைச்
சுற்றி வரச் செய்தார். அந்தரிக்ஷத்தில் நின்று கொண்டு சூரியனைக் கொண்டு பூமியை
அளக்கச் செய்கிறார். சூரியனை ரதம் போல விண்ணில் அமைத்தார். சூரியனுக்குப் பாதை
அமைத்துக் கொடுத்தார். வருடம் மாதம் நாள் பகல் இரவு யக்ஞம் ரிக் இவற்றை
ஏற்படுத்தினர்.
மரங்களின்
மீது அந்தரிக்ஷத்தை விரித்தார். குதிரைகளிடம் வலிமையையும், மாடுகளிடம் பாலையும், இதயத்தில் செயல் வேகத்தையும், நீரில்
அக்னியையும், ஆகாயத்தில் சூரியனையும், மலை மீது சோமனையும் வைத்தார்.
மழை பெய்வதும்
பயிர் வளர்வதும் அவரால். வருணனின் ருதத்தின் படியே நதிகள் நிற்காமல், ஓய்வெடுக்காமல்
ஓடுகின்றன. ஆற்று நீர் சமுத்ரத்தை நிரப்புவதில்லை.
காரணம் இது அறிவுள்ள வருணனின் ஏற்பாடு.
ஆகாயத்தைத்
தூக்கி நிறுத்தியது, பூமியை அளந்தது, எல்லா உயிரினங்களையும் தலைவராக நின்று பரிபாலித்தது ஆகியவையும்
வருணனின் சாதனைகளாகப் பேசப்படுகின்றன. விண்ணும் மண்ணும் வருணனின் தர்மத்தால்
நிலைநாட்டப்பட்டவை. வருணன் தேவர்களுக்கும் பாதுகாவலர்.
பிரபஞ்சத்தைப்
படைத்து அதில் ருதத்தை ஏற்படுத்திய வருணன் மனிதருக்கும் சில விரதங்கள்
விதித்துள்ளார். வருணனின் விரதங்கள் மீறத் தகாதவை. உடல்
முழுவதும் களிமண் பற்றுப் போட வேண்டிய நோய், துருத்தி போல் உடல் வீங்குவது,
பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலை,
வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க முடியாத நிலை இவை வருணனின்
விரதங்களை மீறுவதால் உண்டாகும்.
மித்ர
வருணர்கள் கண்களை விட நன்றாகப் பாதையை அறிந்தவர்கள்.
கண்ணை மூடிக் கொண்டும் அவர்களால் பார்க்க முடியும்.
அவர்களுக்குத் தெரியாமல் ஒருவன் தவறு செய்ய முடியாது.
ருதத்தை
மீறியவர்களை, அதாவது பாவம் செய்தவர்களை வருணன் பாசம் என்னும் கயிற்றினால்
கட்டுகிறார். அந்தக் கட்டிலிருந்து விடுவிக்கக் கூடியவர் அவரே.
(பிற்காலத்தில் இந்தப்
பாசம் யமனுக்கு உரியதாக ஆக்கப்பட்டது.) பாவங்களைத் தெரிந்து செய்தாலும் தெரியாமல்
செய்தாலும் தண்டிக்கிறார்.
மற்றவர்கள்
செய்த தவறுகளின் பலனை நாங்கள் அனுபவிக்காதிருப்போமாக,1 மூதாதையர் செய்த பழிக்கும் எங்கள் பழிக்கும் தண்டனை தராதே
2 என்று
அவர் வேண்டப்படுகிறார்.
தண்டிப்பவராக
இருந்தாலும் கருணையும் மிகக் கொண்டவர் வருணன். பாவிகளிடத்திலும் கருணை காட்டுபவர்.
வேண்டினால் மன்னிக்கிறார். நண்பர்களிடத்தும், உறவினர்களிடத்தும், அயலாரிடத்தும்
செய்த பாவங்களைப் போக்குகிறார். வருணா, உன்னுடைய விரதத்தில் நாங்கள் பிறழாமல் இருப்போமாக என்ற பிரார்த்தனை அடிக்கடி வருணனிடம் வைக்கப்படுகிறது.
மித்ர
வருணர்கள் அறிவற்றவனை அறிவாளி ஆக்குகின்றனர். அறிவுள்ளவனை விழிப்படையச்
செய்கின்றனர். நல்ல பாதையில் அழைத்துச் செல்கின்றனர்.3
தெய்வங்களுக்குச்
செய்த பாவங்களினாலும், அறியாமையால் உன் தர்மத்தை மீறினதாலும் நாங்கள் செய்த
தவறுகளுக்காகக் கோபித்துக் கொள்ளாதே 4 என்ற இந்த மந்திரம் சந்தியா வந்தனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
யத்கிஞ்சேதம்
வருண தைவ்யே ஜனே அபித்ரோஹம் மனுஷ்யாச்சராமஸி,
அசித்தீ யத்தவ
தர்மாயுயோபிம மா நஸ் தஸ்மாதேனஸோ தேவ ரீரிஷ:
என்
உறவினர்கள் வறுமை அடையக் கூடாது. நாங்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றும் வருணன்
வேண்டப்படுகிறார். க்ஷேமத்திலும் யோகத்திலும் நலம் உண்டாகட்டும் என்றும்
பிரார்த்திக்கப்படுகிறார்.
வருண
மித்ரர்கள் துன்பத்திலிருந்து காப்பாற்றுகிறார்கள். உழைக்கத் தூண்டுகிறார்கள்.
அறியாதவர்களுக்கு அறிய
வைக்கிறார்கள். அறிந்தவர்களைப் பாவங்களிலிருந்து நீக்கி நல்ல பாதையில்
அழைத்துச் செல்கிறார்கள்.
குறிப்புகள்
1 2.28.9.
2 7.86.5.
3 7.60.6.
4 7.89.5.
No comments:
Post a Comment