விஷ்ணு
வேதத்தில் விஷ்ணு பற்றிய
மந்திரங்கள் 114. இவற்றில் 31 இல் மட்டும்
அவர் தனியாகப் போற்றப்படுகிறார். 11இல் இந்திரனுடன் சேர்த்துப்
பேசப்படுகிறார். மற்றவற்றில் மருத், பூஷன்,
அர்யமன், வருணன், மித்ரன்
முதலான பல தெய்வங்களுடன் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார்.
விஷ்ணு என்ற சொல் எங்கும்
வியாபித்தது என்ற பொருள் உடையது. இந்த அடைமொழி அக்னிக்கும்,
இந்திரனுக்கும், சூரியனுக்கும் சில இடங்களில் கொடுக்கப்படுகிறது.
பெரும்பாலான இடங்களில் விஷ்ணு ஒரு தனித் தெய்வமாகவே போற்றப்படுகிறார்.
இன்று விஷ்ணு பற்றி வழங்கும்
பல கருத்துகள் ரிக் வேதத்தில் இல்லை. இருக்கின்ற, குறிப்பிடத்தக்க ஒரே விஷயம் அவர் மூன்று அடி எடுத்து வைத்தது தான்.
இது நமக்கு வாமன திரிவிக்ரம அவதாரங்களை நினைவூட்டினாலும் சாயணர் அவ்வாறு
கருதவில்லை. இது சூரியனின் மூன்று நிலைகளைக் (காலை, பகல், மாலை) குறிப்பதாக அவர் கூறுகிறார்.
விஷ்ணுவின் ஒரு அடைமொழியான
அஹர்வித் (ஒளியை அறிந்தவர்) என்பதற்கு வாழ்க்கையின்
இறுதி லட்சியமாகிய ஒளியை அளிப்பவர் என்று சாயணர் கூறுகிறார்.
மனிதன் தேவனாகும் மார்க்கத்தில்,
தேவ நிலைக்கு முந்திய நிலையில் இருப்பவர்களான சூரிகள் எப்பொழுதும்
அவருடைய இடத்தைப் பார்த்துக் கொண்டும் புகழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்கிறது
வேதம்.1 தேவத்தன்மை தருபவர் சூர்யன் என்று சொல்லப்பட்டிருப்பதால்2
விஷ்ணு என்பது சூரியனின் வேறு பெயர் தான் என ஊகிக்க முடிகிறது.
சூரியன், ஸவிதா, பகன்,
பூஷன், விஷ்ணு என்ற பல பெயர்களும் ஒரே சூரியனைக்
குறித்தாலும் அவர்கள் தனித் தனி தெய்வமாகவே போற்றப்படுகிறார்கள்.
விஷ்ணு இந்திரனின் நண்பர்.
அவரோடு சேர்ந்து சோம பானம் அருந்துபவர். விண்ணைத்
தூக்கி நிறுத்தியவர். உலகம் முழுவதும் அவருடைய காலடித் தூசியில்
இருப்பதாக3 ரிக் கூறுகிறது. பாதிக்கப்பட்ட
மனிதர்களுக்காக, அவர்களுக்கு வீடு கொடுப்பதற்காக, மித்ரனின் தர்மப்படி நடந்து தர்மத்தை நிலைநாட்டினார். அவரே உலகை நாம் வாழ்வதற்கு ஏற்றதாகச் செய்தவர்.
எல்லாத் தேவர்களையும் போல,
இவரும் மகிழ்ச்சி தருபவராகவும், வலிமை மிக்கவராகவும்
ருதத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவராகவும் கூறப்படுகிறார். அவரே
ருதத்தின் கர்ப்பம். யக்ஞம் செய்பவர்களுக்கு ருதத்தில் பங்கு
அளிக்கிறார்.
ருத்ரன்
ரிக் வேதத்தில் ருத்ரனைப்
போற்றும் மந்திரங்கள் அக்னி, இந்திரன், வருணன், மருத்துகள், அச்வின்கள்
இவர்களுடையதை விடக் குறைவாகவே உள்ளன. இவர் நோய் நீக்கும் தெய்வம்.
தெய்வக் குற்றத்தால் ஏற்பட்ட நோயாக இருந்தாலும் பல வகையான மருந்துகளுடன்
வந்து அதனைப் போக்க வல்லவர். எல்லா மருந்துகளின் தலைவர்,
நோய்களைக் குணமாக்குபவர், வைத்தியர்களுக்கெல்லாம்
மேலான வைத்தியர் என்று அவருடைய வைத்தியத் திறமை பல இடங்களில் போற்றப்படுகிறது.
ருத்ரன் கோபம் மிகுந்தவர்.
உங்கள் கோபம் எங்கள் குழந்தைகளையும் பேரர்களையும் பாதிக்காமல் இருக்கட்டும்
என்று வேண்டிக் கொள்ளப்படுகிறார்.
மற்ற
தேவர்களைப் போல ருத்ரனும் பகைமையையும் பாவங்களையும் போக்குகிறார். வலிமை மிக்கவர் என்பதால் அசுரர், வஜ்ரபாஹூ என்ற அடைமொழிகள்
இவருக்கு உண்டு. இவருடைய ஆயுதங்கள் வில், அம்பு, நிஷ்கம்.
மருத்துகளின் தந்தை என்று
போற்றப்படுகிறார் ருத்ரன். புகழ்ச்சியால் வசப்படுபவராகவும் கூறப்படுகிறார்.
அர்ஹத் என்ற சிறப்புப் பெற்ற
தேவர்கள் நால்வர்- அக்னி, ருத்ரன்,
மருத், இந்திரன். இவர்களில்
குறைவான பாடல்களைப் பெற்றவர் ருத்ரன் தான்.
ருத்ரன் ருதத்தோடு தொடர்பு
படுத்தப்படவில்லை என்பது கவனத்துக்குரியது. ஆனால் ருதத்தின் மற்றொரு
பெயரான ஸ்வதா என்ற சொல் ருத்திரனின் அடைமொழிகளில் ஒன்றாக வருகிறது.
ருத்ரன் பற்றி ரிக் வேதத்தில்
கூறப்படுவதற்கும் யஜுர்வேதத்தில் வரும் ருத்ரனுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.
யஜுர் வேதத்தில் ருத்ரனின்
கோபமும், எதிரிகளை அழிக்கும் தன்மையும்
வலியுறுத்தப்படுகின்றன. பிற்காலத்தில் சிவனாக உரு மாறுவதற்கான
ஆரம்ப அறிகுறிகள் யஜுர் வேத ருத்ரனிடம் காணப்படுகின்றன.
குறிப்புகள்
1 1.22.20
2 1.110.3,
4.54.2.
3 1.22.17
No comments:
Post a Comment