Popular Posts

Thursday, July 9, 2015

அசுரர்கள்





            இந்திரனால் கொல்லப்பட்ட விருத்திராசுரன், தசரதன் உதவியோடு அழிக்கப்பட்ட சம்பராசுரன் ஆகியோரது கதைகளை நாம் புராணங்களில் பார்த்திருக்கிறோம். தாரகாசுரன், சிங்க முகாசுரன், சூர பத்மன் முதலிய அசுரர்களை முருகன் கொன்றதைக் கந்த புராணம் விவரிக்கிறது.
            அசுரர்கள் பட்டியலில் இந்திரன்1, அக்னி2, வருணன்3, சூரியன்4 ஆகிய தேவர்களும் உண்டு என்பது தெரியுமா? ஆம், இவர்களையும் ரிக் வேதம் அசுரர் என்றே குறிப்பிடுகிறது. மேலும், த்யௌஸ் எனப்படும் ஆகாயம், மருத் எனப்படும் புயற்காற்று, வேள்வி நடத்துவோர், த்வஷ்டா என்னும் தேவத் தச்சர் இவர்களும் அசுரர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். 
            அது மட்டுமல்ல, சூரியன் முதலானவற்றைப் படைத்த முழு முதற் கடவுளையே, பரம்பொருளையே வேதம் அசுரர் என்ற அடைமொழியால் சிறப்பிக்கிறது.5
            அசுரர் என்றால் தீயவர்கள், அவர்களுக்கும் தேவர்களுக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும் என்பதை மட்டும் கேட்டுப் பழகி வந்த நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.
            ஆனால் உண்மை இது தான். அசுரர் என்று ஒரு இனம் இல்லை. அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திரன் முதலான தேவர்களை அசுரா என்று வேதம் விளிக்கும் போது அது அவர்களது வலிமையைக் குறிக்கும் சிறப்புப் பெயராகத் தான் வருகிறது.
            ஏதோ ஓரிரண்டு இடங்களில் மட்டும் அல்ல. ரிக் வேதத்தில் அஸுரர் என்ற சொல் வரும் 90 இடங்களிலும், அதிலிருந்து கிளைத்த அஸுர்ய போன்ற சொற்கள் வரும் 36 இடங்களிலும்  இதே பொருள் தான். ரிக் 3.55 என்ற சூக்தத்தில் 22 மந்திரங்கள் உள்ளன. தேவர்களின் சிறப்புகளைப் போற்றும் இவை ஒவ்வொன்றும் "மஹத் தேவானாம் அசுரத்வம் ஏகம்" என்ற ஈற்றடியைக் கொண்டவை. இது "தேவர்களின் வலிமை பெரியது, தனித்துவம் வாய்ந்தது" என்று பொருள்படும்.
            பொதுவாக, ஒரு சொல்லுக்கு முன்னால் '' என்ற முன்னொட்டைச் சேர்த்து எதிர்ச் சொல் உருவாக்குவது வழக்கம். ஆனால் அசுரர் என்ற சொல் சுரர் என்ற சொல்லிலிருந்து வந்ததல்ல. ரிக் வேதத்தில் சுரர் என்ற சொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்து '' என்ற எழுத்தை நீக்கிப் பிற்காலத்தில் சுரர் என்ற சொல்லை உருவாக்கினார்கள்.
            தீயவர்களைக் குறிக்க, அசுர என்ற சொல் வேதத்தில்  ஆளப்பட்டிருக்கிறதா? இருக்கிறது. தேவர்களின் எதிரிகளான விருகத்வரஸ், வர்ச்சின், பிப்ரு என்ற மூவருக்கு அசுரர் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் வலிமை கருதி அவ்வாறு அழைக்கப்படுகின்றனரே அன்றி அவர்களது இனத்தினாலோ குணத்தினாலோ அசுரர் என்ற பெயர் வரவில்லை.
            இந்திரனும் அக்னியும் வலிமையான பகைவர்களை அழித்ததனால் அசுரக்ன- அசுரர்களை அழித்தவர்- என்ற பெயர் பெறுகிறார்கள். மற்றபடி எல்லா அசுரர்களும் தேவர்களின் பகைவர்கள் என்ற கருத்தை அங்கு காண முடியவில்லை.
            வேதத்திற்கு உரை எழுதிய சாயணர் அசுரர் என்ற சொல்லுக்கு பெரும்பாலான இடங்களில் வலிமையானவர் என்ற பொருளைத் தருகிறார். சில இடங்களில் அதே சொல்லுக்கு, விரும்பத் தகாதவற்றை வெளியேற்றுபவர்6, எதிரிகளை அழிப்பவர்7, உயிர் கொடுப்பவர்8, மழை அனுப்புபவர்9, அசுரர்களை அழிப்பவர்10, உயிரும் உணர்வும் கொண்டவர்11, இருட்டை விரட்டி அடிப்பவர், ஊக்கம் தருபவர் என்று பல வகையாக விளக்கம் அளித்தாலும் அவை யாவும் வலிமையான என்ற பொருளின் விரிவாக்கமாகவே காணப்படுகின்றன. இந்த எல்லா இடங்களிலும் வலிமையான என்ற பொருள் மிகப் பொருத்தமாக இருக்கும்போது, சாயணர் ஏன் வலுக்கட்டாயமாக சொல்லின் உற்பத்தி வேரை மாற்றி விநோதப் பொருள் சொன்னார் என்பது புரியவில்லை. 
            அசுரரும் ராட்சசரும் ஒன்றா? அல்ல. இன்று அவை இரண்டும் ஒரு பொருட் சொற்களாக இருந்தாலும் வேதத்தைப் பொறுத்த வரை அவை வேறு வேறு தான். அரக்கர் என்று தமிழில் குறிப்பிடப்படும் தீய பண்புள்ளோர் வேதத்தில் ரக்ஷஸ் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் வலிமை மிகுந்தவராக இருந்ததால் அசுரர்கள் என்றும் குறிப்பிடப்பட்டனர். இவர்கள் பிறரைத் துன்புறுத்தும் தம் பண்பினால் ராட்சசர் எனப்பட்டனர். தன் வலிமையைப் பிறர் நலனுக்காகப் பயன்படுத்தும் அசுரர்களை தேவர் என்றும் பிறரைத் துன்புறுத்தும் அசுரர்களை ராட்சசர் என்றும் வேதம் அழைக்கிறது.

குறிப்புகள்
1                      1.174.1                       2                      1.151.4                                                                                  
3                      1.24.14                       4                      5.49.2                                                             
5                      10.177.1                  6                        1.131.1                                                            
7                      1.164.2                    8                         1.35.10                                                            
9                      5.63.7                      10                       9.91.2                                                              
11                    8.90.6

குதிரையும் தெய்வமாகிறது





            முதல் நிலையில், பெருஞ் செயல்களுக்குத் தேவையான சக்திகளும் தன்னலமில்லாத உழைப்பும் கொண்ட மனிதர் தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டனர். அடுத்ததாக, நதி, சோமம், மேகம் போன்ற உயிரற்ற  பொருட்களும் அவை மனிதர்க்கு உதவி செய்வதால் தேவத் தன்மை அளிக்கப்பட்டன. அவ்வாறே உதவியும் செய்து நல்வாழ்வுக்கு ஒரு உதாரணமாகவும் விளங்கும் மிருகமாகிய குதிரை தெய்வ நிலைக்கு உயர்ந்தது பற்றிப் பார்க்க இருக்கிறோம்.
            வாழ்க்கையில் வெற்றி பெற வேதம் கூறும் சில அறிவுரைகள்.
            1 உடலளவிலும் மனதளவிலும் எப்பொழுதும் வலிவுடையவனாக  இரு.
            2 இடையூறுகளைக் கண்டோ, எதிர்ப்புகளைக் கண்டோ அஞ்சாமல், அவற்றைத் தாண்டி இலக்கை அடையும் வரை போய்க்கொண்டே இரு.
            3 சோம்பலைத் தவிர்.
            4 செயல்பாட்டில் வேகம் காட்டு.
            5 இடப்பட்ட கட்டுப்பாடுகளால் வேகம் குறையாதிரு.
            6 எஜமானனிடம் விசுவாசமாக இரு. எதிரிகள் கண்டு அஞ்சும்படியான நிலையில் இரு.
            7 நல்லோர் இணக்கம் நாடு. கீழோர் நட்பைத் தவிர்.
            இவற்றைக் கடைப்பிடிப்பதால், மனிதர்க்குச் செல்வம், உணவு ஒளி சேருகிறது. துன்பங்களைக் கடக்கும் வலிமை கிடைக்கிறது என்று வேதம் கூறுகிறது.
            இந்தப் பண்புகளைக் கொண்ட ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டால், நாம் அவற்றைப் பின்பற்றுவது எளிதாக இருக்கும் அல்லவா? அதற்காக வேதம் அடையாளம் காட்டுவது ததிக்ரா என்னும் குதிரையை.
            உணவு தந்து உதவுபவை, தம்மையே உணவாகத் தருபவை, விவசாயத்தில் உதவுபவை, சுமை தூக்கி உதவுபவை என்று மனிதர்க்கு உதவும் மிருகங்கள் பல உண்டு. ஆனால் விவசாயத்திலும் உதவி, போர்க்களத்திலும் உதவி, தன் உயர் பண்புகள் மூலம் மக்களுக்கு வெற்றிக்கு வழிகாட்டும் மிருகம், சுமையைச் சுமந்து கொண்டே விரைந்து செல்லக் கூடிய மிருகம் ஒன்று உண்டென்றால் அது குதிரை மட்டும் தான். இது மனிதரின் நீண்ட நாள் நண்பன். இதன் பண்புகள் வியக்கத் தக்கன. ரிஷி வாமதேவ கௌதமர் அதை வியந்து பாடிய பாடல்களின் (ரிக் வேதம் 4 ஆம் மண்டலம், 38, 39, 40 வது சூக்தங்கள்) சுருக்கத்தை இப்பொழுது பார்க்கலாம்.
            ததிக்ரா எவ்வளவு அழகான பிராணி! அதன் மேனி பளபளக்கும் வண்ணமயமானது. அதனிடம் ஒரு ராஜ கம்பீரம் உள்ளது. அது நமக்குப் போர்க்களத்திலும் பயன்படுகிறது. விவசாயத்திலும் பயன்படுகிறது.
            போர்க்களத்தில் அது அஞ்சுவதில்லை. வீரர்கள் உற்சாகத்தில் குதிப்பதைப் போல இதுவும் கால்களை உயரத் தூக்கி ஆரவாரிக்கிறது. அது ஓய்வை விரும்புவதில்லை. அதனால் சற்று நேரம் கூட சும்மா இருக்க முடியாது. அதைக் கட்டிப் போட்டு வைத்தால், கால்களால் புழுதியை வாரி தன் மேலேயே இறைத்துக் கொள்கிறது.
            தன் எஜமானன் வெற்றி பெற உறுதுணையாக இருக்கிறது. ஆயிரம் பேர் உள்ள கூட்டமாக இருந்தாலும் ஒருவரும் அதைத் தடுக்க முடியாது. அதன் கனைப்பு இடி போல எதிரிகளுக்கு அச்சம் தருவதாக உள்ளது. போர்க் களத்திலிருந்து வெற்றியுடன் மற்றவர்கள் பின் தொடர அது திரும்பும்போது அதன் முகத்தில் தெரியும் கம்பீரமே தனி.
            ரதத்தை விரைந்து இழுத்துச் செல்கிறது. வழி சந்து பொந்துகளாக இருந்தாலும், அவற்றினூடே புகுந்து புறப்பட்டு காற்றைக் கிழித்துக் கொண்டு முன்னேறுகிறது. சமவெளியில் சென்றால் கூட அது செல்லும் வேகத்தைப் பார்த்தால் மலைச் சரிவில் இறங்குவதைப் போலத் தோன்றுகிறது. அது வலிமை மிக்கது. அதன் வேகத்தைக் காற்றுக்கு ஒப்பிடலாமா? கழுகுக்கு ஒப்பிடலாமா?
            கழுத்திலும், வாயிலும், பக்கங்களிலும் அதற்குப் பல கட்டுகளை இட்டாலும் அதன் வேகம் தடைபடுவதில்லை.
            அது எப்பொழுதும் உயர்ந்தோருடனேயே பழகுகிறது. தாழ்ந்தோரை அது வெறுக்கிறது. அது தன் எஜமானரிடம் விசுவாசமாக உள்ளது.
            குதிரையின் சிறப்புகளைப் பேசும் இதில் மனிதர்க்கு எங்கே அறிவுரை இருக்கிறது என்ற வினா எழலாம். மறை அல்லவா? மறைபொருளாக இருப்பது ஆழ்ந்து நோக்கினால் தான் புலப்படும்.  
            ததிக்ரா மனிதர்க்கு வழிகாட்டி. அதைப் போற்றுபவர்களின் பாவத்தைத் தேவர்கள் போக்குகிறார்கள், அது நம் சக்திக்கும் வலிமைக்கும் ஊற்று என்று மற்றோரிடத்தில் கூறுவதன் மூலம் அதன் சிறப்பியல்புகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்திய வாமதேவர், துன்பங்களைத் தாண்டி எம்மை அழைத்துச் சென்றதற்காகத் ததிக்ராவை நான் தினந்தோறும் காலையில் போற்றுகிறேன்  என்றும் பேசுகிறார்.
            இவ்வாறு குதிரையின் சிறப்புகளைப் புகழ்ந்த அவர் போர்க்களத்திலும் வயல்களிலும் வெற்றி பெறுவதற்காகவும் பகைவர்களை வெல்வதற்காகவும் மனித குலத்துக்கு தேவர்கள் தந்த ஒரு நன்கொடை இது, இதற்காக நாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்று கூறுகிறார்.
            போர்க்களத்தில் குதிரையின் பயன்பாடு பற்றி நாம் நன்கு அறிவோம். வயல்களில் வெற்றி பெறுவதற்காக என்று கூறுவதிலிருந்து அவர் காலச் சூழ்நிலையில் குதிரை விவசாயத்துக்குப் பயன்பட்டிருப்பதை அறிகிறோம். போர்க்களத்தில் வெற்றி பெறுவதற்காக என்று கூறிவிட்டு, மீண்டும், பகைவர்களை வெல்வதற்கு என்று அவர் கூறியிருப்பது ஏன்? இது கூறியது கூறலாக உள்ளதே என்று நினைக்கிறோம்.
            ஆழ்ந்து நோக்குகையில் நமது வாழ்வியல் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள நமது மனக் கேடுகளையே அவர் பகைவர் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் என்பதை அறிகிறோம்.
            வாமதேவரின் இந்த மூன்று சூக்தங்களின் மற்றொருசிறப்பு - வேதத்தில் குதிரையைக் குறிக்க வழக்கமாக அசுவ என்ற சொல் தான் பயன்படுகிறது. ஆனால் இந்த 21 பாடல்களில் மட்டும் ததிக்ரா, ததிக்ராவன் என்ற சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.
            ததிக்ரா என்பது ஒரு தேவலோகக் குதிரையின் பெயர் என்ற தோற்றம் ஏற்படும்படியாகத் தான் அது பல இடங்களிலும் ஆளப்பட்டுள்ளது. ஆனால் யாஸ்கரின் நிகண்டிலும் மகீதரரின் யஜுர்வேத உரையிலும் ததிக்ரா என்பது ஒரு தனிப்பட்ட குதிரையின் பெயராக இல்லாமல், குதிரை என்ற இனத்தைக் குறிக்கும் பல சொற்களில் ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது. சொல்லின் வேரை ஆராய்ந்தால் இவர்கள் கூற்று உண்மை என்பது தெரியும்.
            ததி என்றால் தாங்குவது, க்ரம் என்றால் விரைந்து செல்வது. எனவே, சுமை தாங்கி விரைந்து செல்லக் கூடிய ஒரே உயிரினம் குதிரை தான் என்பதைச் சுட்டும் வகையில் தான் அதை, ததிக்ரா என்ற பெயரால் அழைப்பது தெரிகிறது. வாழ்க்கைச் சுமைகள் நமது வேகத்தைக் குறைக்கக் கூடாது என்பது இதன் உட்பொருள். தன் சிறப்புகளின் காரணமாகக் குதிரை தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
            தினசரி சந்தியா வந்தனத்தில் சொல்லும் மந்திரங்களில் ஒன்று இது. பாடப் பாட வாய் மணக்கும்படியான புகழ் கொண்ட ததிக்ரா என்ற வெற்றிகரமான குதிரையைப் போற்றுவோம். அது நமது ஆயுளை நீட்டிப்பதாக.
            ததிக்ராவ்ணோ அகார்ஷம் ஜிஷ்ணோரச்வஸ்ய வாஜின:
            ஸுரபி நோ முகாகரத்.
            நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அல்லவா? குதிரையின் இத்தகைய உயர்நலங்களைப் பேசுவதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகிறது என்பது இதன் பொருள்.
            ததிக்ரா சூக்தங்களின் கடைசி மந்திரம் ஆழ்ந்த தத்துவப் பொருள் உடையது.
            அவனே ஒளியில் வாழும் சூரியன். ஆகாயத்தில் வாழும் வசு. வேள்விக் கூடத்தில் தேவர்களை அழைப்பவன். வீட்டின் விருந்தினன்.  அவன் மனிதரிடத்தில், உயர்ந்த இடத்தில், ருதத்தில், விண்ணில், வசிக்கிறான். அவன் நீரில் தோன்றியவன். பசுக்களில் தோன்றியவன். ருதத்தில் தோன்றியவன். மலையில் தோன்றியவன். அவனே ருதம்.
என்று கூறுவதன் மூலம், பல பெயரிட்டுப் பல தேவர்களை வணங்கினாலும் எல்லாம் ஒன்றே. என்றும் மாறாத, மானிடரால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத ருதமே (இயற்கை நியதியே) எல்லாப் பொருள்களிலும் எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது என்கிறார். குதிரையினிடத்திலும் அதன் செயல்பாட்டைக் கண்டு வியந்து அதனைப் பரம்பொருளாகக் கருதிப் போற்றுகிறார் வாமதேவ கௌதமர் . 
            வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புவோர் அனைவராலும் பின்பற்றத் தகுந்தவை ததிக்ராவின் உயர்பண்புகள்.