நம்முடைய கற்பனை ரதத்தை பின்னோக்கி ஓட்டிச் சென்று மனித நாகரிகத்தின்
துவக்க காலத்திலிருந்து வருவோம்.
இங்கே மனித
வாழ்க்கை மிருக வாழ்க்கையிலிருந்து சற்றும் வேறுபடாமல் இருக்கிறது. கல்லை
ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியது தான் மனித நாகரிக வளர்ச்சியின் முதல் படி.
அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள்-
வேட்டையாடக்
கல்லைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு மனிதன். பெரிதாகக் காற்று வீசியது.
மரங்கள் இல்லாத பகுதியில் மண்ணை வாரிக் கொண்டு சென்றது. அப்பொழுது அந்த மனிதன்
கண்ணில் இரண்டு கற்கள் தென்பட்டன. அவை அவன் அதுவரை பார்த்திருந்த கற்களிலிருந்து
வேறுபட்டு இருந்தன. இது எங்கிருந்து வந்தது, இந்த வழியாக நான் பலமுறை
போயிருக்கிறேனே, இது வரை கண்ணில் பட்டதில்லையே, அடியில் புதைந்து கிடந்த இது காற்றினால்
மேல் மண் பறந்து போன பின் வெளிப்பட்டிருக்கிறது போலும் என்று பலவாறாகச்
சிந்தித்தான். அதை வெளிப்படுத்தும் மொழித் திறன் அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகள்
கழித்துத் தான் கிடைத்தது.
அதைத்
தெரிந்து கொள்ளும் ஆர்வத்தால் ஒன்றைக் கையில் எடுத்தான். அது கை தவறிக் கீழே
இருந்த மற்றொரு கல் மீது விழுந்தது. அதிலிருந்து தீப் பொறி வந்தது. காட்டுத்
தீயையும் மின்னலையும் பார்த்து அஞ்சி வந்த இவனுக்கு மின்னல் போல் கண நேரம்
ஒளிர்ந்து மறைந்தாலும் அச்சம் தராத இந்தச் சிறு தீப் பொறியைப் பார்த்து ஆச்சரியம்
ஏற்பட்டது. மறுபடியும் கல்லை எடுத்துக் கீழே போட்டான். மீண்டும் தீப் பொறி வந்தது.
திரும்பத் திரும்ப இந்த விளையாட்டைச் செய்து கொண்டிருந்தவனுக்கு மற்ற மனிதர்க்கும்
இதைக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. கிய்யா முய்யா என்று குரல் எழுப்பி அருகில்
இருந்தவர்களைக் கூப்பிட்டான். எல்லோரும் இந்த வித்தையைப் பார்த்து வியந்தனர். ஆளுக்கு
ஆள் பிடுங்கிக் கொண்டு போய் செய்து பார்த்தனர். சருகுகள் குவிந்திருந்த ஓரிடத்தில்
அவர்கள் இதை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அவை தீப்பற்றி எரிந்தன. எல்லோரும்
வியந்தனர், மகிழ்ந்தனர், கூத்தாடினர்.
தீயைக்
கண்டுபிடித்தவனுடைய பெயர் ப்ருகு. (தீ எரியும்போது ப்ருக் ப்ருக் என்ற ஒலி உண்டாவதாக அந்த மக்கள்
நினைத்தார்கள். இந்த ஒலியிலிருந்து அந்த மனிதனின் பெயர் வந்திருக்கலாம். அல்லது
ப்ருகு என்பவரின் பெயரைக் கொண்டு அந்த ஒலிக்குப் பெயரிட்டிருக்கலாம்). தீக் கல்லைத் தனக்கு வெளிப்படுத்திய காற்றை அவன் ‘மாதரிச்வான்’ (பூமித் தாயின் மடியில் கீறுபவன்) என அழைத்தான்.
மனிதன் தீ
மூட்டக் கற்றுக் கொண்டு விட்டான். அவனது நாகரிகம் துரித கதியில் நடை போடத்
துவங்கியது. வேத விருட்சத்தின் முதல் விதை அங்கே தூவப்பட்டது.
காட்டு
விலங்குகளுக்குப் பயந்து குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், குகைக்குள்ளும்
வந்து தாக்கும் மிருகங்களிடமிருந்து தப்பும் வழி அறியாது தவித்த மனிதன், தான்
இருக்குமிடத்தில் தீ மூட்டி விலங்குகள் கிட்டே வர முடியாதபடி செய்தான். எங்கேனும்
செல்ல வேண்டி இருந்தால் ஒரு எரியும் மரக்கட்டையைக் கையில் ஏந்தியபடி சென்றான்.
(மின் வசதி ஏற்படாத காலத்தில் கிராமங்களில் ஒரு தென்னை மட்டையைச்
சுருட்டிக் கட்டிக் கொளுத்திக் கொண்டு இரவில் பயணம் செய்வர். இதற்கு சுளுந்து
என்று பெயர். இதை நான் கடைசியாகப் பார்த்தது 1960 இல்.)
சருகுகளினிடையே
கற்களை மோதித் தீ மூட்டுவது எளிதாக இல்லை. பல முயற்சிகளுக்குப் பின் தான் அதில்
வெற்றி பெற முடிந்தது. ஆனால் மூட்டிய தீயை அணையாமல் பாதுகாப்பது அவனுக்கு எளிதாக
இருந்தது.
பிற்காலத்தில் மொழி அறிவு ஏற்பட்டபின், ‘முன்னால் சென்று வழிகாட்டிச் செல்பவன்’ என்ற பொருளில் தீக்கு ‘அக்னி’
என்று பெயரிட்டான். அதுவே அதன் இயற்பெயராக நிலைத்தது. தீ அவனது உணவைச் சமைத்துச்
சுவை கூட்டியது. இரவிலும் அவனால் பார்க்க முடிந்தது. கொழுந்து விட்டு எரியும்
தீச்சுவாலையின் அழகை வியந்து அணு அணுவாக ரசித்து மகிழ்ந்தான். தனக்கு இத்தனை நன்மைகளைச்
செய்யும் தீயை நன்றியுடனும் மரியாதையுடனும் நோக்கினான், அதை வழிபடத் தொடங்கினான்.
கற்களை
உரசுவதால் தீ உண்டாவது போல் பிற பொருள்களையும் அக் கூட்டத்தினர் உரசிப் பார்க்கத்
தொடங்கினர். பல ஆண்டுகள் கழித்து, குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த இரண்டு
மரக்கட்டைகளை உரசியும் தீ மூட்ட முடியும் என்பதை ப்ருகுவின் கூட்டத்தினர் (ப்ருகவர்) கண்டுபிடித்தனர்.
பல்லாயிரம்
ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் மொழியைச் செம்மை செய்து தன் மனக்கருத்தைப்
பிறர்க்குத் தெரிவிக்கும் வல்லமை பெற்ற காலத்திலும் இந்த ஆச்சரிய, நன்றி, மரியாதை,
பக்தி உணர்வுகள் குறையாமல் இருந்தன, வேத ரிஷிகளின் கவிதைகளில் அக்னியைப் புகழ்ந்து
எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான பாடல்களில் வெளிப்பட்டன. அதில் மாதரிச்வானையும்,
ப்ருகுவையும், ப்ருகவர்களையும் அவர்கள் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை.
தீ மூட்டத்
தேவையான பெரிய காய்ந்த மரங்களைத் தன் இருப்பிடத்துக்குக் கொண்டு வர பிற மனிதரின்
உதவி தேவைப்பட்டது. அது வரை பால் உறவுக்காக மட்டுமே மற்றவரை நாடியவன் இன்று அதற்கு
அப்பால் சென்று பல மனிதரிடமும் இணக்கமாக வாழத் தலைப்பட்டான். ஓரிடத்தில் தீ மூட்டி
பல மனிதரும் பாதுகாப்பு கருதி அதற்குப் பின்னே சேர்ந்து இருக்கத் தொடங்கியதில் சமூக
வாழ்க்கை துவங்கியது.
தங்குமிடத்தில்
தங்களுக்கு முன்னே தீ வளர்த்தார்கள், எனவே ‘முன்னால் வைக்கப்படுபவன்’ என்ற பொருளில்
அக்னிக்குப் ‘புரோ-ஹிதன்’ என்றும்
பெயரிட்டார்கள். கூட்டத்தைச் சார்ந்தவர் வெளியில் சென்றிருந்தால் அவருக்குக்
கூட்டம் இருக்குமிடத்தைத் தெரிவித்து அழைக்க நெருப்பைப் பயன்படுத்தினர். எனவே ‘அழைப்பவன்’ என்ற பொருளில் தீக்கு ‘ஹோதா’ என்றும் பெயரிட்டார்கள்.
ஆபத்து
வரும்போது ஒன்று கூடுவதும் அது நீங்கியபின் அடித்துக் கொள்வதும் மனித இயல்பு
அல்லவா? அவ்வாறு நேரும்போது, மீண்டும் ஆபத்து வரும்
என்பதைச் சுட்டிக் காட்டி ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி தவறு செய்தவரைத்
தண்டித்துத் திருத்த ஒரு தலைவன் ஏற்பட்டான். மனிதனின் அரசியல் வாழ்க்கை
துவங்கியது.
தீயின்
உதவியால் தனக்கு வசதியான இடத்தில் காட்டை அழித்து விவசாயம் செய்தான். உலோகங்களை
உருக்கி கருவிகளும் ஆயுதங்களும் அணிகலன்களும் செய்தான். பொருளாதாரம் என்றொரு புதிய
அத்தியாயம் அவன் வாழ்வில் ஏற்பட்டது.
தத்தம்
கூட்டத்திற்குள் அந்தந்தத் தலைவர்கள் அமைதி ஏற்படு்த்தினாலும் கூட்டங்களுக்கு
இடையே மோதல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. வலுத்தவன் வென்றான், தன்
ஆட்சிப் பரப்பைப் பெரிதாக்கிக் கொண்டான். தன் வலிமைக்கும் அறிவுக்கும்
செல்வத்துக்கும் அக்னியே காரணம் என்று கருதி அதை நன்றியுடன் வழிபட்டான்.
விண்ணில்
தோன்றும் சூரியனைப் பார்க்கிறான். வெப்பம், வெளிச்சம், வலிமை இவற்றில் அது தீயைப்
போலவே உள்ளது. இதுவும் தீ தானோ?
மின்னல்
மின்னுகிறது. கண நேரமே ஆனாலும் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சுகிறது, மரங்களைத்
தீப்பற்றி எரிய வைக்கிறது. இதுவும் அக்னி தானோ?
கடலிலிருந்து
அவ்வப்போது தீச்சுவாலைகள் கிளம்புகின்றன. நீருக்குள்ளும் அக்னி மறைந்து வாழ்கிறானோ?
மரங்கள்
உரசுவதால் காட்டுத் தீ உண்டாகிறது. மரங்களினூடேயும் அவன் மறைந்து வாழ்கிறானோ?
தீயை
மூட்டிவிட்டுக் கொஞ்சம் அசந்தால் அது அணைந்து விடலாம், வேறு எங்கேனும் பற்றிக் கொண்டு
ஆபத்து விளைவிக்கலாம், தீ மேல் வைக்கப்பட்ட உணவு கருகிவிடலாம். தீ விஷயத்தில்
மனிதன் எப்பொழுதும் விழிப்புடனும் செயல் துடிப்புடனும் இருப்பது அவசியமாகிறது.
எனவே அக்னியை ‘செயலுக்குத்
தூண்டுபவன்’ என்று பெயரிட்டான்.
வெளி உலகில்
பல வகையான அக்னிகளைப் பார்த்த அவன் தன் உடலுக்குள்ளே உற்று நோக்குகிறான். பசி
எப்படி எரிக்கிறது? எப்படி செயலுக்குத் தூண்டுகிறது? பசி இல்லாவிட்டால்
செயல்களே நின்று விடுமே? இதுவும் அக்னி தானோ?
உயிருள்ள
உடல்களில் எப்போதும் சூடு இருந்து கொண்டே இருக்கிறது. செத்த உடல் சில்லிட்டுப்
போகிறது. குகைக்குள்ளே திருடன் போல உடலுக்குள்ளேயும் அக்னி ஒளிந்து வாழ்கிறானோ?
இனப் பெருக்க
வேட்கை தோன்றிவிட்டால் அது எப்படி உடலையும் உள்ளத்தையும் எரிக்கிறது? ஆக, அதுவும் அக்னி தானோ?
ஒரு பொருளைப்
பற்றித் தெரி்ந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுத் தாகம் எப்படி எல்லாம் மனிதனை நிலை
கொள்ள விடாமல் இயக்கி வைக்கிறது? அதுவும் அக்னி தான்.
இப்படியாக,
மனிதனின் நாகரிக வளர்ச்சியின் வேகத்தை முடுக்கிவிட்ட அக்னியைப் புகழ்ந்து வேத
ரிஷிகள் பாடிய பாடல்களைப் பற்றி அடுத்தடுத்த கட்டுரைகளில் காண்போம்.
No comments:
Post a Comment