Popular Posts

Friday, December 31, 2010

வேதத்தின் ஒலியா, பொருளா, எதைக் கற்பது?

வேதம் எல்லோராலும கற்கப்படலாம் என்றால், வேதத்தின் ஒலியா அல்லது பொருளா எதைக் கற்பது என்ற கேள்வி எழுகிறது. இன்று வேதம் கற்கும் பிராமணர்கள் பெரும்பாலும் வேதத்தின் ஒலியை மட்டுமே கற்று அதை பிழையின்றி ஒப்புவிக்கும திறமை பெற்றுள்ளனர். இந்தப் பெரும்பான்மையருக்கு தாங்கள் சொல்லும் மந்திரங்களின் பொருள் தெரியாது. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதும இல்லை. வேத மந்திரஙகளின் ஒலியே இறைவனின் மூச்சுக் காற்று. அதை ஒலித்தாலே அதன் அதிர்வலைகள் உலகில் நன்மையை விளைவித்துக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.

முற்காலத்தில் வேதம் பயின்றவர்கள் அதன் உரையாகிய பாஷ்யமும் சேர்த்தே பயின்றனர். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்திரமேரூர்க் கல்வெட்டிலிருந்து ஊராட்சி மன்றத் தேர்தலுக்கு நிற்பவர் வேத பாஷ்யம் படித்திருந்தால் அப்பதவிக்கு உண்டான பொருளாதார நிபந்தனை அவருக்குத் தளர்த்தப்பட்டதாக அறிகிறோம். ஆனால் ஒரு கால கட்டத்தில் மக்கள் வேதத்தின் பொருளை விட அதன் ஒலியே முக்கியத்துவம் உடையது என்று கருதத் தொடங்கினர். இது இறைவன் சம்பந்தப்பட்டது, இதைச் சொன்னாலும் புண்ணியம், கேட்டாலும் புண்ணியம் என்ற கருத்தே பரவியது. பொருள் உணர்ந்தவர்களும் அதைப் பிறர்க்குச் சொல்ல முயலவில்லை. கண்மூடித்தனமாக நம்பினாலும், மக்கள் இறை உணர்வைத் தானே கொண்டிருக்கிறார்கள், அந்த நம்பிக்கையைக் கெடுப்பானேன் என்ற ரீதியில் வாளா இருந்து விட்டனர்.

Friday, December 24, 2010

வேதம் கற்கத் தடை விதிக்க முடியாது.

மாக்ஸமுல்லருக்கு முன்னரே பல ஐரோப்பியர்கள் வேதத்தைக் கற்று மொழிபெயர்த்து ஆராய்ச்சி செய்துள்ளனர்.மாக்ஸ்முல்லரோ தன் வாழ்நாளின் பெரும்பகுதியை - சுமார் 45 வருடங்கள் என்று நினைவு- வேத ஆராய்ச்சியிலேயே செலவிட்டவர். இந்து சமயத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் இந்து பாரம்பரியம் இல்லாதவர்களும் வேதத்தைக் கற்று அச்சிட்டுப் புத்தக வடிவில் எல்லோருக்கும் கிடைக்கச் செய்துள்ளனர். இன்று இணைய தளத்திலும் வேத இலக்கியம் கிடைக்கும் போது வேதம் கற்கக் கூடாது என்று யார் யாருக்குத் தடை விதிக்க முடியும்?

Sunday, December 19, 2010

எல்லோரும் வேதம் கற்கலாமா?

இஸ்லாமியர்களின் வேதம் எது என்றால் குர் ஆன் என்று எல்லோரும் சொல்வார்கள். அவர்களில் பெரும்பாலானோர் அந்த வேதத்தை ஓதவும் அறிந்துள்ளனர். இஸ்லாமியர் எவரும் அதைக் கற்கவோ ஓதவோ தடை இருப்பதில்லை. அதன் மொழிபெயர்ப்புகள் எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றன. அதோ போல கிருத்துவர்கள் தங்கள் வேதமாகிய பைபிளைத் தங்கள் தாய்மொழியிலேயே படிக்கிறார்கள். பைபிள் படிக்கத் தகுதியில்லாத கிருத்துவர் என்று எவரும் இல்லை. ஆனால் ஹிந்து மதத்தில் சிலர் தான் கற்கலாம், சிலர் தான் கற்பிக்கலாம் என்று உள்ளது. இதை ஹிந்து மதத்தின் தனிச்சிறப்பு என்று கொண்டாடுவதா அல்லது மற்ற மதங்களைப் பார்த்து காப்பியடித்து அதே போன்ற நிலைமையை இங்கு ஏற்படுத்த வேண்டுமா? வேகமாக மாறிவரும் உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுப்பாடுகள் செல்லுமா?

Thursday, December 16, 2010

நான் ஒரு வேத மாணவன்

சற்றே வித்தியாசமான மாணவன். இளமையில் கல்லாது விட்டுவிட்டு, முதுமையில் கற்க விழைபவன். வேதம் சம்பந்தமான என் சிந்தனைகளை வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் இங்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்.