Popular Posts

Sunday, January 2, 2011

வேத ஒலிக்கு முக்கியத்துவம் வந்தது எப்படி?

பொருளை விட ஒலியே முக்கியம் என்று மக்கள் கருதும் நிலை ஏன் வந்தது? வேதத்தை முழுமையாக அறிந்து கொள்ள 48 ஆண்டுகள் பயில வேண்டும் என்பது வழக்கு. முஸ்லீம்கள் வடநாட்டை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு, தென்னாட்டிலும் ஊடுருவத் தொடங்கிய கால கட்டத்தில் இவ்ளவு நீண்ட காலம் கல்வி கற்பதற்குத் தேவையான சமூக அமைதியோ, பாதுகாப்போ, அரச ஆதரவோ இல்லாத சூழ்நிலை. எந்த நிமிடம் மாற்று மதத்தினர் வந்து பாடசாலையைத் தாக்குவார்களோ, எப்பொழுது உயிர் போகுமோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் குறுகிய காலத்தில் வேதத்தின் மூலத்தை மட்டும் கற்றுக் கொண்டு பாடசாலையிலிருந்து வெளியேறுவோம், பின்னால் ஒரு பாதுகாப்பான காலம் வரும், அது வரை இந்த மூலத்தைப் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சேர்த்தால் போதும் என்று கருதினர். பதஞ்ஜலி குறிப்பிட்ட சாகைகளில் பெரும்பகுதி இந்தக் காலத்தில் தான் அழிந்திருக்க வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் தான் அதுவரை எழுத்தில் வடிக்கப்படாமல் இருந்த வேத பாஷ்யத்தை (உரையை) ஸாயணர் எழுதிவைத்தார். மூலத்தை எழுதி வைத்தால் பிரதி எடுக்கும்போது தவறுகள் ஏற்பட்டுப் பெருகிக் கொண்டே போகும் என்பதால் மூலம் என்றும் எழுதாக் கிளவியாகவே இருந்து வந்திருக்கிறது.